நடிகர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது பெயரில் உள்ள தந்தையின் அடையாளத்தை நீக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபகாலமாக நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோரின் குடும்ப உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. சங்கீதா தாக்கல் செய்ததாகக் கூறப்படும் விவாகரத்து மனுவில், விஜய் தனது குடும்பத்தை விட்டு விலகி இருப்பதாகவும், அதற்கு ஒரு முன்னணி நடிகையுடனான நட்பே காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டதாகத் தகவல்கள் கசிந்தன. இதன் தொடர்ச்சியாக, ஜேசன் சஞ்சய் தனது தந்தையை சமூக வலைதளங்களில் ‘அன்ஃபாலோ’ (Unfollow) செய்தது இந்த மோதலை உறுதிப்படுத்துவதாக அமைந்தது.
இந்தச் சூழலில், ஜேசன் சஞ்சய் தனது பெயருக்குப் பின்னால் இருந்த தந்தையின் அடையாளமான ‘V’ (விஜய்) என்ற எழுத்தை நீக்கிவிட்டு, தாயின் பெயரைக் குறிக்கும் ‘S’ (சங்கீதா) என்ற எழுத்தைச் சேர்த்துக்கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ‘ஜேசன் சஞ்சய் S’ என்று அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டதாகக் கூறப்பட்ட தகவல், அவரது குடும்பச் சிக்கலை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்ததால் இணையத்தில் தீயாய் பரவியது.
இருப்பினும், இந்தத் தகவல் அடிப்படை ஆதாரமற்றது என விஜய்யின் ஆதரவாளர்களும், நடுநிலையாளர்களும் மறுப்பு தெரிவித்துள்ளனர். அதாவது விஜய்யின் முழுப்பெயர் ‘ஜோசப் விஜய் சந்திரசேகர்’ என்பதாகும். இதனால் அவரது பிள்ளைகள் இருவருமே ‘ஜோசப்’ என்ற பெயரையே தங்களது பெயருக்குப் பின்னால் பயன்படுத்தி வருகின்றனர். ஜேசன் சஞ்சய்யின் அதிகாரப்பூர்வ பெயர் ‘ஜேசன் சஞ்சய் ஜோசப்’ என்பதாகும்.
ஜேசன் சஞ்சய் தற்போது ‘சிக்மா’ (Sigma) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஆரம்பக் கட்டப் பணிகள் முதல் தற்போது வரை, அவர் தனது பெயருடன் எந்த ஒரு இனிஷியலையும் சேர்த்துப் பயன்படுத்தவில்லை. அவர் தனது பெயரை மாற்றியதற்கோ அல்லது தந்தைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இனிஷியலில் மாற்றம் செய்ததற்கோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆதாரமும் வெளியாகவில்லை. எனவே, குடும்பப் பிரச்சினைகளை முன்வைத்து ஜேசன் சஞ்சய்யின் பெயரைச் சுற்றி பரப்பப்படும் தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்திகளே என்று திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
