வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தொண்டர்கள் வேகத்துடன் செயல்பட்டு, எதிரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசினார்.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: “இன்னும் இரண்டு மாதங்களில் 2026 சட்டமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தத் தேர்தல் நமக்கு மிக முக்கியமானது. மக்கள் செல்வாக்குடன் விளங்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
தற்போது நம்முடைய எதிரிகள் ஏதோ பலமாக இருப்பது போலத் தோன்றும். ஆனால், அது உண்மையான பலம் அல்ல. பொதுமக்களின் பேராதரவு எனும் மகா சக்தி நம் பக்கம்தான் இருக்கிறது. கழகத் தொண்டர்கள் களத்தில் பிரமாதமாகச் செயல்படத் தயாராக உள்ளனர்.
நாம் இப்போது செயல்படும் வேகத்தை விட இன்னும் கூடுதலாக வேகம் காட்ட வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் களமிறங்கி, எதிரிகளை ஒழித்துக்கட்ட வேண்டும்,” எனத் தொண்டர்களுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அழைப்பு விடுத்தார்.
