தமிழக அரசு வழங்கும் இலவசக் கல்வி உபகரணங்களை மாணவர்கள் முறையாகப் பயன்படுத்தி, சமுதாயத்தில் சிறந்தவர்களாக உயர வேண்டும் என்று முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கல்வித்துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்துக் கூறியதாவது: “நாங்கள் படித்த காலத்தில் நோட்டுப் புத்தகம் முதல் மிதிவண்டி வரை அனைத்தையும் சொந்தச் செலவில்தான் வாங்க வேண்டியிருந்தது. அப்போது மிதிவண்டி வைத்திருப்பதே ஒரு கௌரவமாகக் கருதப்பட்டது. ஆனால், இன்றையச் சூழலில் மாணவர்களுக்குத் தேவையான மிதிவண்டி, பஸ் பாஸ், பாடப்புத்தகங்கள் என அனைத்தையும் அரசே வழங்கி வருகிறது.
அடிப்படைத் தேவையான நோட்டு, பேனா, பென்சில், வரைபடம், ஜாமென்ட்ரி பாக்ஸ் மற்றும் புத்தகப் பை மட்டுமின்றி, காலணி முதல் மடிக்கணினி வரை அனைத்து உபகரணங்களையும் அரசே வழங்கி மாணவர்களைப் படிக்க வைக்கிறது. இந்த அரிய வாய்ப்பைப் பெற்றுள்ள இக்கால மாணவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்.”
மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் சிறப்பம்சங்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், “உலகிலேயே மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய முதல் மாநிலம் தமிழ்நாடுதான். தமிழகத்தின் இந்த முன்னோடித் திட்டத்தைப் பார்த்துதான் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் சில காலம் நிறுத்தப்பட்டிருந்த இந்த மடிக்கணினி வழங்கும் திட்டம் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இந்த ஆட்சியின் இறுதிக் காலத்திலாவது திமுக அரசுக்கு வந்திருப்பது பாராட்டத்தக்கது,” என்று அவர் தெரிவித்தார்.
