மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள லோஹகாட் கோட்டையில் இருந்து தவறி விழுந்து இறந்ததாகக் கூறப்பட்ட 26 வயது இளைஞர் கேதன் விஷால் அகர்வால், உண்மையில் அவரது வருங்கால மனைவி சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேத்தன் சவுத்ரி ஆகியோரால் கோட்டையின் உச்சியில் இருந்து தள்ளிவிட்டுக் கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் கெட்டனுக்கும் சியாவிற்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்று, அவர்கள் பாலித் தீவிற்குச் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், கேதனின் பாஸ்போர்ட் மட்டும் மர்மமான முறையில் திருடப்பட்டதால் அந்தப் பயணம் ரத்தானது.

அதன் தொடர்ச்சியாக, ஜூன் 18 அன்று இருவரும் லோஹகாட் கோட்டைக்குச் சென்றபோது, சியாவின் காதலனான சேத்தன் சவுத்ரி இருசக்கர வாகனத்தில் அங்கு வந்துள்ளார். இருவரும் சேர்ந்து கேதனை  ஒரு பொருளால் தாக்கி, கோட்டையின் உச்சியிலிருந்து கீழே தள்ளியுள்ளனர். கெட்டன் ஒரு அனுபவம் வாய்ந்த மலையேற்ற வீரர் என்பதால், அவர் தவறி விழ வாய்ப்பில்லை என்று உறவினர்கள் சந்தேகம் எழுப்பியதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

தொழில்நுட்ப ஆதாரங்கள், சாட்சிகள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் சியாவிற்கும் சேத்தனுக்கும் இருந்த கள்ளத்தொடர்பைக் கண்டறிந்த போலீசார், இருவரையும் அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையின் போது இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டதாக புனே ஊரக எஸ்பி சந்தீப் சிங் கில் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்ட இருவரையும் செவ்வாய்க்கிழமை புனே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, அவர்களை ஜூன் 29 வரை போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் நடத்தி குற்றவாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று கேதனின்  தந்தை அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், “திருமணம் பிடிக்கவில்லை என்றால் சியா அதை முன்னரே சொல்லியிருக்கலாம், நாங்கள் திருமணத்தை நிறுத்தியிருப்போம்; இவ்வளவு கொடூரமான மனநிலையை அவளுக்கு அவளது குடும்பம் எப்படி கற்றுக்கொடுத்தது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கேதனின் தாய், சியா தன்னை ஏமாற்றிவிட்டதாகக் கண்ணீருடன் கூறி, குற்றவாளிகள் இருவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.