தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்துப் பேச உள்ளனர்.

டெல்லியில் அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து, முதற்கட்டமாகத் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. பாஜக சார்பில் மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவும், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டு முறையான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

பாஜக தரப்பில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொகுதிகள் மற்றும் ஆட்சி அமைந்தால் அதிகாரப் பகிர்வு கோரப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பொங்கலுக்குப் பிறகு தொகுதிப் பங்கீடு குறித்த இறுதி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாமக (அன்புமணி தரப்பு) ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், பாஜகவின் இந்த நகர்வு தமிழக அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.