பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற பிரம்மாண்டமான இசை விழாவில், ஒட்டுமொத்த உலகையே உலுக்கும் வகையிலான அதிரவைக்கும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்ட இந்த விழாவில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பல பெண்களுக்கு மர்ம நபர்கள் சிலர் ‘சிரிஞ்ச்’ மூலம் ஊசி குத்தியதாக அடுத்தடுத்து புகார்கள் எழுந்துள்ளன. இவ்வாறு சிரிஞ்சால் குத்தப்பட்ட பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகி இருக்கும் தகவல் சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

​இந்த அச்சுறுத்தலுக்கு மத்தியில், இடுப்பில் பல சிரிஞ்சுகளை மறைத்து வைத்திருந்த சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை போலீசார் பாரிஸில் தற்காலிகமாகப் பிடித்தனர். ஆனால், அவர் போலீசாரின் பிடியில் இருந்து நொடிப் பொழுதில் தப்பியோடியது இந்த விவகாரத்தில் உள்ள மர்மத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. இதுமட்டுமன்றி, மற்றொரு பெண் ஒரு தனியார் இல்லத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறியுள்ளது. இந்த தொடர் அச்சுறுத்தல்களின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன என்பதைக் கண்டறிய அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.