சீன ரயில்வே என்றாலே அதிவேக புல்லட் ரயில்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ரயில் நிலையங்கள் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, சீனாவின் ரயில்வேயின் முற்றிலும் மாறுபட்ட எதார்த்தமான ஒரு பக்கத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சஞ்சன் குமார் என்ற இந்தியப் பயணி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (@phirsetravel) சீனாவின் சாதாரண ரயில் ஒன்றின் ‘ஜெனரல் கோச்’ (General Coach) பெட்டியின் உள்ளே எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sanjan Kumar || Extreme Traveller (@phirsetravel)

அந்த வீடியோவில், இந்திய பொதுப் பெட்டிகளைப் போலவே சாதாரண இருக்கைகள், போதிய இடவசதி இல்லாமல் நின்றுகொண்டும், மக்கள் பொதுவாக அமர விரும்பாத இடங்களில் அமர்ந்துகொண்டும் நெரிசலுடன் பயணிக்கும் சாமானிய மக்களின் அன்றாடப் பயணச் சூழல் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த இந்திய நெட்டிசன்கள், சீனாவின் நவீன பிம்பத்துடன் ஒப்பிட்டு வியப்படைவதோடு, இந்திய ரயில்களின் பொதுப் பெட்டிகளுடன் இதனை ஒப்பிட்டுப் பேசி வருகின்றனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இணையவாசிகள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். எந்தவொரு நாட்டின் பளபளப்பான நற்பெயரைக் கண்டு மட்டும் அந்த நாட்டின் ஒட்டுமொத்த எதார்த்தத்தையும் எடைபோட முடியாது என்றும், அனைத்து நாடுகளிலும் நவீன வசதிகளுடன் சாமானிய மக்களுக்கான எளிய வசதிகளும் இருக்கத்தான் செய்யும் என்றும் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சிலர் இந்த வீடியோவை பதிவிட்ட இந்தியப் பயணிக்கு, சீனாவில் இதுபோன்ற உணர்திறன் மிக்க எதார்த்தமான விஷயங்களைப் படம் பிடிக்கும்போது கவனமாக இருக்குமாறு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். சீனா உலகிலேயே மிகப்பெரிய அதிவேக ரயில் வலையமைப்பைக் கொண்டிருந்தாலும், அங்குள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் தங்களின் தினசரி தேவைகளுக்காகவும், குறைந்த கட்டணத்திற்காகவும் இன்றும் இதுபோன்ற சாதாரண ரயில்களையே பெருமளவில் நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.