தலைநகர் டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள மெஹ்ராலி பகுதியில், நடைபாதையில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த 11 வயது சிறுமி ஒருவரை, கார் ஓட்டுநர் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில், வீடற்ற அந்தச் சிறுமி தனது குடும்பத்தினருடன் சாலையோர நடைபாதையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வாடகை காரில் வந்த பாசு குமார் சிங் (29) என்ற நபர், சிறுமியைத் திடீரென காரில் கடத்திச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர். இதனையடுத்து டெல்லி காவல்துறை தனிப்படைகள் அமைத்து, நூற்றுக்கும் மேற்பட்ட சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.
இதற்கிடையில், அந்த நபர் சிறுமியை குருகிராம்-ஃபரிதாபாத் சாலைக்கு அருகில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்குக் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததோடு, சிறுமியைத் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்து உடலை அங்கே வீசிச் சென்றுள்ளார்.

சிசிடிவி மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில், குற்றச் சம்பவம் நடந்த 6 மணி நேரத்திற்குள் அந்த கார் ஓட்டுநரைக் காவல்துறை அதிரடியாகக் கைது செய்தது. விசாரணையின் போது குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரிடம், பாரதிய நியாய சன்ஹிதா  மற்றும் போக்சோ  சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், குற்றவாளியைக் குற்ற இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, அவன் தப்பியோட முயன்று போலீஸாரின் துப்பாக்கியைப் பறித்துச் சுட்டதால், தற்காப்பிற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அவனது காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த கொடூர சம்பவம் டெல்லி மற்றும் அண்டை மாநில எல்லைப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.