கரூர் அருகே உள்ள கிராமம் ஒன்றில் நடந்துள்ள ஒரு சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை, அந்தச் சிறுமியின் பாட்டியே அரிவாளால் வெட்டி, காவல் நிலையத்திற்கே இழுத்துச் சென்ற சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
சம்பவத்தன்று, அதே பகுதியில் வேலை பார்த்து வரும் மாணிக்கம் (31) என்பவர், நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுதுகொண்டே தன் பாட்டியிடம் நடந்துகூறினாள். தன் செல்லப் பேத்திக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தைக் கேட்டு அந்தப் பாட்டியின் ரத்தம் கொதித்தது. ஆத்திரத்தின் உச்சத்திற்குக் சென்ற அவர், வீட்டில் இருந்த அரிவாளைத் தூக்கிக்கொண்டு நேராக மாணிக்கம் இருக்கும் இடத்தை நோக்கிப் பாய்ந்தார்.
மாணிக்கத்தை எதிர்கொண்ட பாட்டி, அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆத்திரம் அடங்காமல் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மாணிக்கத்தை அங்கேயே விட்டுவிடாமல், அவரது சட்டையைப் பிடித்து இழுத்துக்கொண்டே அங்கிருந்து காவல் நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினார். நடுரோட்டில் பாட்டி ஒரு குற்றவாளியை இழுத்துச் சென்ற இந்தச் சம்பவம் அவ்வழியே சென்றவர்களைப் பார்த்து வாயடைக்கச் செய்தது.
பாட்டி இழுத்துச் செல்வதைப் பார்த்த சிறுமியின் உறவினர்களும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். விஷயம் என்னவென்று அறிந்ததும் அவர்களும் ஆத்திரத்தின் எல்லைக்குச் சென்றனர். நடுவழியில் வைத்து மாணிக்கத்தை சூழ்ந்துகொண்ட கும்பல், அவரை சரமாரியாகத் தாக்கியது. தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் ரத்தக் கறையில் அவர் நடுரோட்டில் கிடந்தார்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர், பொதுமக்களின் பிடியில் இருந்து பலத்த காயங்களுடன் இருந்த மாணிக்கத்தை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிக்குத் தொல்லை கொடுத்த நபர் மீதும், சட்டத்தைத் தன் கையில் எடுத்துத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் கரூரில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
