பாஜக முன்னாள் MLA வாந்தி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை இழிவுபடுத்துவதுதான் திமுகவின் அரசியல் நாகரீகமா? எதிர்க்கட்சியினர், திட்டங்களின் பயனாளிகள், பெண்கள் என தொடர்ந்து பல்வேறு தரப்பினரை இழிவுபடுத்திப் பேசிய திமுகவினர், இப்போது தங்களுக்கு வாக்களிக்காத மக்களையே சாபமிடும் நிலைக்குச் செல்வது என்ன மனநிலை என்று தெரியவில்லை.

மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணங்களில் இதுபோன்ற அகங்காரப் பேச்சுகளும் ஒன்று என்பதை திமுக-வினர் மறக்கக் கூடாது. இனியாவது மேடைகள் உங்கள் வீடுகள் அல்ல என்பதை உணர்ந்து, மக்களின் வாக்குரிமையை மதித்து, அரசியல் நாகரீகத்துடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் முன்னதாக சைதாப்பேட்டை தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி முன்னாள் அமைச்சர் மா சுப்பிரமணியன் இந்த தொகுதிகளுக்காக பல நன்மைகளை செய்துள்ளதாகவும் மருத்துவமனை கட்டி ஏராளமான உயிர்களை காப்பாற்றியுள்ளதாகவும் கூறிய அவர் இத்தனையும் செய்தும் அவருக்கு ஓட்டு போடாததால் வாக்களிக்காத மக்களுக்கு சாபம் விட்டார்.

அதாவது அந்த மக்களுக்கு நல்ல சாவே வராது எனவும் என்னை திமுகவினர் யாரும் யாருக்கும் உதவி செய்ய வேண்டாம் எனவும் இனி ஐந்து வருடத்திற்கு நாம் ஓய்வெடுக்கலாம் என்றும் கூறினார். மேலும் அவருடைய பேச்சு சர்ச்சையாக மாறிய நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்