மனிதனுக்கும் விலங்குகளுக்குமான பாசம் எப்போதுமே அளவிட முடியாதது. அதிலும் நாய்க்கும் மனிதனுக்கும் இடையேயான பந்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு ஆழமானது. அப்படிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான மற்றும் உயிரை உறைய வைக்கும் சம்பவத்தின் வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் இதயங்களை வென்று வருகிறது. அதாவது தண்ணீரில் தத்தளித்த ஒரு நாயை, தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ரதன் லால் மாலி என்பவர் காப்பாற்றியுள்ள விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நாய் எதிர்பாராதவிதமாக நீரில் மாட்டிக்கொண்டு தவிக்கிறது. கரையேற தீவிரமாக முயன்றாலும், நீரின் வேகமும் அதன் வழுக்கும் தன்மையும் நாயின் முயற்சிகளைத் தோல்வியடையச் செய்கின்றன. ஒவ்வொரு முறையும் அது மேலே வர முயன்று முடியாமல் கீழே நழுவிச் செல்வதைக் காணும்போதே நெஞ்சம் பதைபதைக்கிறது.

இந்த இக்கட்டான சூழலில்தான் ரதன் களமிறங்குகிறார். கொஞ்சமும் யோசிக்காமல் நீரின் அருகில் சென்ற அவர், தன் கைகளை நீட்டி அந்த உயிரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால், பயமும் பதற்றமும் கலந்திருந்த அந்தச் சூழலில் கையை மட்டும் வைத்து நாயைக் காப்பாற்றுவது கடினமாக இருந்தது. கீழே விழும் அபாயம் இருந்தபோதிலும், ரதன் தனது முயற்சியைக் கைவிடவில்லை. உடனடியாக தன் கையில் இருந்த துண்டு ஒன்றை அந்த நாயை நோக்கி நீட்டினார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ratan Lal Mali (@ratan_mali_soniyana)

அந்தத் தருணம் மிகவும் முக்கியமானதாக அமைந்தது. பயத்தில் இருந்த அந்த நாயும் தனது புத்திசாலித்தனத்தைக் கைவிடவில்லை. ரதன் நீட்டிய துண்டை அது சட்டென கவ்விப் பிடித்தது. அந்தத் துண்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நாயை, ரதன் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி பத்திரமாக வெளியே இழுத்தார்.

இந்த வீடியோவை ரதன் லால் மாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துகொள்ள, அது காட்டுத்தீ போல பரவியது. மனிதநேயத்தின் உண்மையான முகத்தைக் காட்டுவதாக இந்தச் செயலை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். ரதனின் தைரியத்தையும், ஆபத்தான கட்டத்தில் அந்த நாய் காட்டிய புரிதலையும் மக்கள் பாராட்டித் தள்ளி வருகின்றனர்.