பெரிய ஷாப்பிங் மால்கள், ஐடி நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களில் சென்சார் மூலமாக இயங்கும் தானியங்கி குழாய்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், பாத்திரம் அல்லது வாளி நிரம்பியதும் தண்ணீர் தானாகவே நின்றுவிடும் ஒரு அசத்தல் கிராமத்து டெக்னாலஜி தற்போது சமூக வலைதளங்களில் பலரின் புருவங்களை உயர்த்தியுள்ளது.
அதாவது சாதாரண குளிர்பான பாட்டில் மற்றும் ஒரு சிறிய லிவரைப் பயன்படுத்தி ஒரு நபர் செய்துள்ள இந்த வித்தையானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. வைரலாகும் அந்த வீடியோவில், ஒரு நபர் வீட்டில் உள்ள ஆர்.ஓ (RO) வாட்டர் ஃபில்டர் குழாயுடன் ஒரு காலி குளிர்பான பாட்டிலையும், சில எளிய அமைப்புகளையும் இணைத்துள்ளார். குழாயைத் திறந்துவிட்டால் வாளியில் தண்ணீர் விழத் தொடங்குகிறது.
வழக்கம்போல தண்ணீர் நிரம்பினாலும் வாளி நிரம்பும் வரை நாம் அருகே இருந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால், இந்த ஏற்பாட்டில் வாளியில் தண்ணீர் நிரம்பி அதன் எடை அதிகரிக்க அதிகரிக்க, அந்த எடையின் காரணமாக பாட்டிலுடன் இணைக்கப்பட்டிருக்கும் லீவர் தன் நிலையை மாற்றுகிறது. வாளி முழுமையாக நிரம்பிய ஒரு குறிப்பிட்ட கணத்தில், அந்த மெக்கானிசம் மூலம் குழாய் தானாகவே மூடிக்கொள்கிறது. இதனால் தண்ணீர் வீணாவது த தவிர்க்கப்படுவதோடு, வாளியின் அருகில் நின்று காத்திருக்கும் வேலையும் மிச்சமாகிறது.
View this post on Instagram
இந்த அட்டகாசமான கண்டுபிடிப்பைக் கண்ட நெட்டிசன்கள் அந்த நபரின் மூளையைக் கண்டு வியந்துபோய் உள்ளனர். என்ன மாதிரி ஐடியா இது என்று ஒரு நெட்டிசன் சிலாகித்துப் பாராட்ட, மற்றொருவரோ “இவர் தினமும் எந்த பிராண்ட் பாதாம் பருப்பு சாப்பிடுகிறார்?” என்று கலாய்த்துத் தள்ளி வருகிறார்.
இருப்பினும், இந்த முறையிலும் சில சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. எல்லா வகையான குழாய்களிலும் இதை உடனடியாகப் பொருத்திவிட முடியாது. பிரத்தியேகமாக புஷ்-காக் அல்லது லீவர் வகை குழாய்களில் மட்டுமே இது வேலை செய்யும். மேலும், தொடர்ந்து இதையே பயன்படுத்தும்போது குழாயின் லீவர் பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, காலப்போக்கில் குழாய் பழுதாகக் கூடும் என்றும் சில தொழில்நுட்ப ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறாயினும், இந்தியர்களின் இந்தச் சொந்த மூளைத் திறமை மீண்டும் ஒருமுறை உலகை வியக்க வைத்துள்ளது.
