சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் கரன்சி மதிப்புகளுக்கு ஏற்ப தங்கம் விலையில் தினசரி மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை தொடர் ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென விலை சற்று குறைந்தது மக்களுக்கும் நகை வாங்குவோருக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தந்திருந்தது. ‘

ஆனால், இந்த நிம்மதி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. காலை நிலவிய விலை மாற்றத்திற்குப் பின், மாலையில் தங்கம் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 1440 வரையில் குறைந்த நிலையில் தற்போது மாலை விலை அதிரடியாக உயர்ந்த ஷாக் கொடுத்துள்ளது. தற்போது 1280 ரூபாய் வரையில் உயர்ந்து  22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ₹14,200 என்ற விலையிலும், ஒரு சவரன் (8 கிராம்) ₹1,13,600 என்ற உச்ச விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

காலை நேரத்தில் சற்று குறைந்திருந்த விலை, மாலையில் திடீரென ஏற்றம் கண்டிருப்பது நகை பிரியர்கள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. திருமண விசேஷங்கள் மற்றும் பண்டிகைக் காலங்களை முன்னிட்டு தங்கம் வாங்கத் திட்டமிட்டிருந்த மக்கள், நாளுக்கு நாள் உயர்ந்து செல்லும் தங்கம் விலையைக் கண்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.