தமிழக அரசியலில் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட தேனி மாவட்டம், தற்போது முழுமையாக திமுகவின் வசமாகியுள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என மூன்று முதலமைச்சர்களை அரியணையில் அமரவைத்த இந்த மண்ணில், இன்று ஒரு அதிமுக பிரதிநிதி கூட இல்லாத ‘வாஷ்-அவுட்’ நிலை உருவாகியுள்ளது.
ஏற்கனவே உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றிய திமுக, தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் வருகையால் மாவட்டத்தின் முழு அதிகாரத்தையும் தன்வசப்படுத்தியுள்ளது.
தேனி அரசியலின் இரு துருவங்களாக விளங்கிய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் இப்போது திமுகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்தபோதே இவர்களுக்குள் கடும் பனிப்போர் நிலவி வந்தது.
2021 சட்டமன்றத் தேர்தலில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்ட நிலையில், தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்பியாக தங்க தமிழ்ச்செல்வனும், முன்னாள் முதலமைச்சர் என்ற அந்தஸ்துடன் ஓ.பன்னீர்செல்வமும் ஒரே கூடாரத்தில் இணைந்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சர் என்ற முறையில் ஓபிஎஸ்-க்கு திமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், “செல்வமும் செல்வனும்” இனி இணைந்து செயல்படுவார்களா என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
அதிமுகவின் முகவரியாக இருந்த தேனி மாவட்டம், தற்போது திமுகவின் கோட்டையாக மாறியிருப்பது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சிக்கு மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது. அதேசமயம், பழைய பகையை மறந்து இவர்கள் இருவரும் கைகோர்ப்பார்களா என்பதைத் தமிழக அரசியல் களம் உற்று நோக்கி வருகிறது.
