மதுரை மண்டேலா நகரில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, ‘வெற்றிவேல் வீரவேல்’ எனத் தமிழில் முழக்கமிட்டுத் தனது உரையைத் தொடங்கினார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்ததை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட அவர், திமுக அரசின் செயல்பாடுகளால் உயிரிழந்த பக்தர் பூர்ணசந்திரனுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் திமுக அரசு எவ்வித நன்மையும் செய்யாமல் ஊழலில் மட்டுமே திளைப்பதாகவும், குறிப்பாக டாஸ்மாக்கில் மட்டும் 40,000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகவும் அவர் கடுமையாகச் சாடினார்.
ஏழைகளுக்கான மத்திய அரசின் வீடு கட்டும் திட்டங்களை திமுக முடக்கி வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், திமுகவின் கனவு கானல் நீராகப் போகிறது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்ததை நினைவு கூர்ந்ததோடு, தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்தார்.
காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்றும், ஜல்லிக்கட்டுக்குத் தடை விதித்த காங்கிரஸிடமிருந்து பாஜக தான் அந்த உரிமையை மீட்டெடுத்தது என்றும் அவர் கூறினார்.
ஐரோப்பிய நாடுகளுடனான புதிய ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தின் ஜவுளி மற்றும் மின்னணுத் துறை பெரும் வளர்ச்சி பெறும் எனக் குறிப்பிட்ட பிரதமர், தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான ஆட்சி அமையத் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
