மேலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், 234 தொகுதிகளிலும் தவெக தொண்டர்களைச் சந்தித்துத் தேர்தல் பணிகளை முடுக்கிவிடும் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.

இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை விஜய் மீது வைத்துள்ள ஈடுபாட்டைப் போல எந்தத் தலைவருக்கும் இருந்ததில்லை என்றும், தவெக-வின் வருகையால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே கடும் குழப்பத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மதுரையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் பொதுக்கூட்ட மேடையில் தந்தை பெரியார் படம் அகற்றப்பட்டதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவின் போஸ்டர்கள் மற்றும் மேடைகளில் பெரியார் படம் இல்லாதது வருத்தத்திற்குரியது என்று அவர் சாடினார்.

மேலும், மதுரையில் வைக்கப்பட்டிருந்த பதாகைகள் அனைத்தும் அதிமுகவின் அடையாளம் இல்லாமல், பாஜகவின் போஸ்டர்கள் போலவே காட்சியளிப்பதாகவும், அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் படங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.