உத்தரபிரதேச மாநிலத்தில், திருமணத்தன்று மணமகன் குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டதால், மணமகள் தைரியமாகத் திருமணத்தை நிறுத்தி திருமண ஊர்வலம் அப்படியே திருப்பி அனுப்பிய அதிரடிச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சிவம் என்ற வாலிபருக்கு, ஒரு பெண்ணுடன் கடந்த திங்கட்கிழமை இரவு திருமணம் நடந்தது. கோலாகலமாகத் திருமண மேடைக்கு வந்த மணமகன் சிவம், முழு போதையில் தள்ளாடியபடி வந்துள்ளார்.

மணமகனின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் ஆத்திரமடைந்த நிலையில், போதை தலைக்கேறிய மணமகன் சிவம் திடீரென தனக்கு வரதட்சணையாக ‘புல்லட் பைக்’ வேண்டும் என்று கூறி அங்கிருந்தவர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்யத் தொடங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் போதையின் உச்சத்திற்குச் சென்ற சிவம், திருமண மேடையிலேயே தனது உடைகள் அனைத்தையும் கழற்றி எறிந்துவிட்டு, வெறும் அண்டர்வேருடன் நின்று அங்கிருந்தவர்களை மிரள வைத்துள்ளார். மணமகனின் இந்த அருவருப்பான அராஜகத்தைக் கண்ட மணமகள், “இப்படிப்பட்ட ஒரு போதை ஆசாமியுடன் எனது வாழ்க்கை தேவையில்லை” என்று திருமணத்தை மேடையிலேயே அதிரடியாக ரத்து செய்தார்.

இதற்கிடையே இருதரப்புக்கும் இடையே மோதல் முற்றி, மணமகன் வீட்டார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், போதையில் சுயநினைவின்றி இருந்த மணமகனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்பொழுது இருதரப்பினரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், தன்பாலின உரிமைகளுக்காகவும்,சுயமரியாதைக்காகவும் துணிச்சலாகத் திருமணத்தை நிறுத்திய அந்த மணமக்களை சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் தங்களின் பாராட்டுகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.