ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், 45 வயது மதிக்கத்தக்க நீரஜ் என்ற பெண்மணி மீது அதிவேகமாக வந்த எஸ்யூவி (SUV) கார் ஒன்று திட்டமிட்டு மோதி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் இது ஒரு சாதாரண விபத்து என்று நினைக்கப்பட்ட நிலையில், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்தபோதுதான், இது விபத்து அல்ல… பக்காவாக ஸ்கெட்ச் போட்டு நடத்தப்பட்ட கூலிப்படை கொலை என்பது அம்பலமாகியுள்ளது.

இந்தத் திட்டமிட்ட கொலையை வேறு யாரும் செய்யவில்லை, பாதிக்கப்பட்ட பெண்ணின் சொந்த மகளே செய்திருப்பது ஒட்டுமொத்த ஜெய்ப்பூரையும் உலுக்கியுள்ளது. கொல்லப்பட்ட நீரஜின் மகள் ஆயுஷி சர்மா, அரசு வேலை மற்றும் சொத்து தகராறு காரணமாகத் தன் தாயைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தன் உறவினர்களுடன் கூட்டுச் சேர்ந்து, சுமார் 7 லட்ச ரூபாய் பணம் கொடுத்து கூலிப்படையை ஏவி காரை ஏத்திக் கொன்றுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவத்தில் தொடர்புடைய 8 குற்றவாளிகளைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கொடூரக் கொலையின் முக்கிய சூத்திரதாரியாகக் கருதப்படும் பால்ராம் (என்கிற ரவி) தப்பியோடி தலைமறைவாக உள்ள நிலையில், அவரைப் பிடிக்க போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.