தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ, நர்ஸ் மனைவியே கணவனுக்கு குளுக்கோஸ் ட்ரிப்ஸ் (IV) வழியாக டாய்லெட் கிளீனரை ஏத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரஷாந்த் என்ற நபர், சமீபத்தில் தான் வளைகுடா (Gulf) நாட்டில் இருந்து ஊருக்குத் திரும்பியுள்ளார். ஆனால், இவருடைய மனைவி சந்தியாவிற்கும், அனில் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
தங்களின் கள்ளக்காதலுக்கு பிரஷாந்த் இடையூறாக இருப்பதாகக் கருதிய சந்தியா, கள்ளக்காதலன் அனில் மற்றும் அவனது நண்பன் வெங்கட் சாயுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டியுள்ளார். முதலில் பிரஷாந்தை மொட்டை மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயன்றுள்ளனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர் அந்தப் பயங்கர விபத்தில் உயிர் தப்பி, படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கணவன் சாகாமல் தப்பியதால் ஆத்திரமடைந்த சந்தியா, தான் ஒரு நர்ஸ் என்பதால் தனக்குத் தெரிந்த மருத்துவ அறிவைப் பயன்படுத்தி ஒரு கொடூரமான காரியத்தைச் செய்துள்ளார். மருத்துவமனையில் கணவனுக்கு ஏறிக்கொண்டிருந்த ஐவி (IV) குளுக்கோஸ் லைனில், ரகசியமாக டாய்லெட் கிளீனிங் லிக்விடை இன்ஜெக்ட் செய்துள்ளார். இதனால் பிரஷாந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சதி அம்பலமானதை அடுத்து, நர்ஸ் சந்தியா, அவரது கள்ளக்காதலன் அனில் மற்றும் அவனது நண்பனைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
