மேற்கு ஆசியாவில் ஈரான் – அமெரிக்கா இடையே தற்காலிகப் போர் நிறுத்தம் அமலில் உள்ள போதிலும், அங்கு நிலவும் நிச்சயமற்ற சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது குடிமக்களுக்கு அதிரடியான பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ‘X’ சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான், ஈராக் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு அமீரகக் குடிமக்கள் பயணம் செய்ய உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.
அந்த நாடுகளில் தற்போது தங்கியுள்ள அமீரகக் குடிமக்கள், தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு உடனடியாகத் தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், வார்த்தைப் போர் நீடிப்பதால் எந்த நேரத்திலும் பதற்றம் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்தப் பயணத் தடைக்கு முன்னதாக, கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ‘ஓபெக்’ (OPEC) மற்றும் ஓபெக்+ அமைப்புகளிலிருந்து வெளியேறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்திருந்தது. இந்த முடிவு ஈரானுக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அமீரகத்தின் இந்தத் தொடர் நடவடிக்கைகள், அதுவும் இந்த மோதலில் நேரடியாக ஈடுபடுமா? என்ற விவாதத்தை உலக அரங்கில் கிளப்பியுள்ளது.
இதற்கிடையில், ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா கமெனி, அமெரிக்காவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். எந்த விலை கொடுத்தும் ஈரான் தனது அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களைக் கைவிடாது. அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு நாங்கள் ஒருபோதும் பணிய மாட்டோம். ஈரானின் இராணுவத் திறன் எங்களது தேசிய அடையாளம் மற்றும் இறையாண்மையின் சொத்து என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் பொருளாதார ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் ஐக்கிய அரபு அமீரகம் எடுத்து வரும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கு ஆசிய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
