அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், பாகிஸ்தானிடம் ஒருநாள் தேவைக்கான ‘மூலோபாய எண்ணெய் இருப்பு’ (Strategic Oil Reserves) கூட இல்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை அந்த நாட்டு அமைச்சரே ஒப்புக்கொண்டுள்ளார்.

பாகிஸ்தானின் பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக், உள்ளூர் ஊடகமான ‘சாமா டிவி’-க்கு அளித்த பேட்டியில், அண்டை நாடான இந்தியாவைச் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்: இந்தியாவைப் போல எங்களிடம் எண்ணெய் இருப்பு கிடையாது. ஒருநாள் கூட தாக்குப்பிடிக்கும் அளவுக்கு எங்களிடம் சேமிப்பு இல்லை. இதற்குக் காரணம் ஐஎம்எஃப் (IMF) விதித்துள்ள கடும் நிபந்தனைகளே என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

இந்தியாவிடம் 600 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி இருப்பு உள்ளது. அவர்கள் ஐஎம்எஃப் பிடியில் இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோது, வரியைக் குறைத்துத் தங்கள் நாட்டு மக்களைக் காக்கும் நிதி நிலைமை இந்தியாவிடம் இருந்தது. ஆனால், எங்களிடம் அந்த வசதி இல்லை  என அவர் வெளிப்படையாகப் பேசினார்.

பாகிஸ்தான் பிரதமர் செபாஸ் ஷெரீப் கூறுகையில், வளைகுடாப் போரால் பாகிஸ்தான் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருவதாகக் குறிப்பிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுத்த முயற்சிகள் அனைத்தும் இந்தப் போரினால் வீணாகிவிட்டதாக அவர் ஆரப் நியூஸ் (Arab News) தளத்திற்குத் தெரிவித்துள்ளார். இருப்பினும், சவுதி அரேபியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தங்களுக்குக் கைகொடுக்கும் என அவர் நம்புகிறார்.

அமெரிக்கா – ஈரான் இடையேயான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் மத்தியஸ்தராகச் செயல்பட முயன்று வருகிறது. ஆனால், இதில் பல சிக்கல்கள் நீடிக்கின்றன.  பாகிஸ்தான் ராணுவத் தளபதி பீல்டு மார்ஷல் அசிம் முனீர், ஈரானின் நலன்களைப் பாதுகாக்க முயல்கிறார், எனவே அவரை நம்ப வேண்டாம் என அமெரிக்க அறிக்கை ஒன்று ட்ரம்ப் நிர்வாகத்தை எச்சரித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் ஒரு நல்ல அண்டை நாடாக இருக்கலாம், ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைக்கு அவர்கள் பொருத்தமான இடைத்தரகர் அல்ல என ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். பொருளாதார ரீதியாகத் திவாலாகும் நிலையில் உள்ள பாகிஸ்தான், இந்தப் போரின் விளைவுகளிலிருந்து தப்பிக்கச் சவுதி அரேபியாவையே முழுமையாக நம்பியுள்ளது.