தமிழக அரசியல் களத்தில் திமுகவின் தொ.மு.ச., அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம், சிபிஎம்-மின் சி.ஐ.டி.யூ. எனப் பல்வேறு கட்சிகளின் தொழிற்சங்கங்கள் வலுவாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழக வெற்றிக் கழகமும் (தவெக) அந்தப் பட்டியலில் அதிரடியாக இணைந்துள்ளது. கட்சித் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அவர்களின் உத்தரவின் பேரில், தவெக பொதுச்செயலாளரும் அமைச்சருமான என்.ஆனந்த் தலைமையில் இதற்கான தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதன் தொடர்ச்சியாக, “தமிழக வெற்றிக்கழக தொழிற்சங்க பேரவை” என்னும் பெயரில் ஒரு புதிய தொழிற்சங்க அமைப்பு முறைப்படி இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவின் தொழிற்சங்க பேரவையிலிருந்து கமலக்கண்ணன் உள்ளிட்ட ஏராளமான முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்ததைத் தொடர்ந்து இந்த நகர்வு மிக வேகமாக அரங்கேறியுள்ளது.
மகளிர் அணி, வழக்கறிஞர் அணி எனப் பல பிரிவுகள் ஏற்கனவே உள்ள நிலையில், தற்போது தொழிலாளர்களுக்கான இந்தப் புதிய பேரவையை முதலமைச்சர் விஜய் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து, நிர்வாகிகளின் பட்டியலையும் வெளியிட உள்ளார். தவெக-வின் இந்த அடுத்தக்கட்ட அரசியல் பாய்ச்சல் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
