தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கடந்த மே 13 அன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, எடப்பாடி பழனிசாமிக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க அரசுக்கு ஆதரவாக வாக்களித்த விவகாரம் இன்னும் ஓயாத நிலையில், தற்போது இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றப் படிக்கட்டுகளை ஏறியுள்ளது.

தங்களுக்கு எதிராக அதிமுக கொறடா கொடுத்த தகுதி நீக்க நடவடிக்கைக்கு பயந்து, அந்த 25 பேரில் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்தியபாமா ஆகிய 3 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவிகளை அவசர அவசரமாக ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வில் இணைந்தனர்;

இவர்களது ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்யக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிரடியாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

தகுதி நீக்க மனு நிலுவையில் இருக்கும்போது ராஜினாமாவை ஏற்பது கட்சித்தாவல் தடைச் சட்டத்தையும், மக்கள் தீர்ப்பையும் நீர்த்துப்போகச் செய்யும் செயல் என்றும், இதனால் அடுத்தடுத்து இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டு அரசுக்கு வீண் பண விரயம் ஏற்படுவதால் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து, அவர்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.