ஈரான் உடனான மோதலில் அமெரிக்கா இதுவரை சுமார் 2.3 பில்லியன் முதல் 2.8 பில்லியன் டாலர் இந்திய மதிப்பில் சுமார் ரூ.19,400 கோடி முதல் ரூ.23,700 கோடி வரையிலான ராணுவ தளவாடங்களை இழந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ‘சி.எஸ்.ஐ.எஸ்’ (CSIS) திங்க் டேங்க் அமைப்பு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், மார்ச் 26 அன்று ஈரானின் ராணுவ பலம் சிதைக்கப்பட்டுவிட்டதாகக் கூறி 24 மணி நேரம் கூட முடியாத நிலையில், ஈரான் பதிலடி கொடுத்தது. சவுதி அரேபியாவில் உள்ள ‘பிரின்ஸ் சுல்தான்’ அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது மார்ச் 27 அன்று ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில், மிக விலையுயர்ந்த E-3 AWACS ரடார் விமானம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இந்த விமானத்தின் மதிப்பு சுமார் ரூ.5,920 கோடி ஆகும். இது வானில் இருந்தபடியே எதிரி நாட்டு ஏவுகணைகளைக் கண்டறியும் ஒரு நடமாடும் ‘கமாண்ட் சென்டர்’ ஆகும்.

இது பற்றி சி.எஸ்.ஐ.எஸ் மூத்த ஆலோசகர் மார்க் கேன்ஷியன் வெளியிட்டுள்ள கணக்கீட்டின்படி, எதிரி ஏவுகணைகளைத் தடுக்கும் THAAD அமைப்பின் ஒன்று அல்லது இரண்டு சக்திவாய்ந்த ரடார்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.4,100 கோடி முதல் ரூ.8,200 கோடி வரை இருக்கும். அதன்பிறகு தவறுதலாக அமெரிக்காவே தனது படைகள் மீது நடத்திய தாக்குதலில் குவைத்தில் மூன்று F-15 போர் விமானங்கள் சாம்பலாகின. : ஈரானின் நவீன ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அமெரிக்காவின் வான்வழிப் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவி பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய இந்தப் போரில், ஈரான் தனது அண்டை நாடுகளான வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தியது ஒரு ராஜதந்திர தவறாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அந்த நாடுகள் அமெரிக்காவுடன் மேலும் நெருக்கமாகியுள்ளன.

இருப்பினும், டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் தேர்தல் காரணங்களுக்காகப் போரில் ஏற்பட்டுள்ள உண்மையான சேத விவரங்களை மறைப்பதாக நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் போர்களைப் போலவே, இதுவும் அமெரிக்காவிற்கு ராணுவ ரீதியான வெற்றியைத் தந்தாலும், மூலோபாய ரீதியாக (Strategic) பெரும் தோல்வியாக முடிய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.