சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், கடந்த 2-ஆம் தேதி காவலாளியாக வேலைக்குச் சேர்ந்த நேபாளத்தைச் சேர்ந்த லட்சுமண பிரசாத் (40), தனது 9 வயது மகள் கீதாவைத் தூக்கிலிட்டுக் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
லட்சுமண பிரசாத் தனது குடும்பத்துடன் பள்ளி வளாகத்தில் உள்ள அறையிலேயே தங்கி வசித்து வந்த நிலையில், அவரது மனைவியும் இரண்டாவது மகளும் நேபாளத்திற்குச் சென்றிருந்தனர். இதனால் மூத்த மகள் கீதாவுடன் அவர் மட்டும் பள்ளியில் தங்கியிருந்தார். இந்நிலையில், நேற்று பள்ளி வாகனத்தை எடுப்பதற்காக ஓட்டுநர் அஸ்வின் சென்றபோது, பள்ளியின் இரண்டாவது மாடியில் சிறுமி கீதா தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பள்ளி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தபோது, கயிறு அறுந்து கீழே விழுந்த நிலையில் லட்சுமண பிரசாத் உயிருக்குப்போராடிக் கொண்டிருப்பதும், மகள் கீதா தூக்கிலிடப்பட்ட நிலையில் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிருக்குப்போராடிய லட்சுமண பிரசாத் ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, நேபாளத்திலிருந்து வந்த லட்சுமண பிரசாத்தின் மனைவியிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இப்பள்ளியில் வேலைக்குச் சேருவதற்கு முன்பு, இந்த குடும்பம் நுங்கம்பாக்கம் பகுதியில் வாடகைக்கு தங்கியிருந்தபோது, லட்சுமண பிரசாத் தனியார் உணவகத்திலும், அவரது மனைவி ரயில்வே அதிகாரிகள் குடியிருப்பில் சமையல் வேலையும் செய்து வந்துள்ளனர்.
அப்போது சுமிதாவிற்கு, வீட்டிற்குத் தண்ணீர்க் கேன் போடும் சந்தீப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. ஒருமுறை கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்தபோது, வீட்டிற்கு வந்த லட்சுமண பிரசாத் அவர்களைத் தவறான நிலையில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து கணவன்-மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டபோதிலும் சுமிதா கள்ள உறவைக் கைவிட மறுத்துள்ளார்.
சமீபத்தில் சுமிதா தனது இரண்டாவது மகளுடன் பீகாருக்குச் சென்ற நிலையில், இதனால் கடுமையான ஆத்திரமடைந்த லட்சுமண பிரசாத், தனது மனைவிக்கு வாட்ஸ்அப் வீடியோ கால் செய்து, மூத்த மகள் கீதாவைத் தூக்கிலிட்டுக் கொல்வதைக் காட்டிவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
