முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா, வேலூர் அமிர்தி வன உயிரியல் பூங்கா மற்றும் சேலம் குரும்பட்டி வன உயிரியல் பூங்கா ஆகியவற்றுக்கு வரும் ஜூன் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் பார்வையாளர்கள் கட்டணமின்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்துள்ளார். இந்த இலவச அனுமதி நாட்களுக்கான முழு கட்டணத்தையும் தனது குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள ‘வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை’ அரசாங்கத்திற்குச் செலுத்திவிடும் என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில், அமைச்சரின் முழுமையான பேட்டியைக் காணாமல், ஊடகங்களில் வெளியான பாதி தகவல்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ ஐடி விங் (IT Wing) கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது.

கஜானாவில் காசில்லை என்று கூறிவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் முதலமைச்சரின் பிறந்தநாளுக்காக இப்படி 2 நாட்கள் இலவச அனுமதி வழங்குவதா என்றும், இதனால் ஏற்படும் வருவாய் இழப்பு, வாயில்லா ஜீவன்களின் உணவு மற்றும் ஊழியர்களின் சம்பளத்திற்கு யார் பொறுப்பு என்றும், ‘Shadow CM’ மற்றும் அமைச்சர்கள் சேர்ந்து தமிழ்நாட்டைச் சூறையாடுவதாகவும் தி.மு.க தரப்பில் ஆவேசமாகப் பதிவிடப்பட்டது.

தி.மு.க-வின் இந்தக் கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தினர் (த.வெ.க) சமூக வலைதளங்களில் மிகக் கடுமையான எதிர்வினையாற்றி வருகின்றனர். அரசுப் பணத்தை வாரி வீட்டிற்கு கொண்டு போகத் தாங்கள் ஒன்றும் கோபாலபுரத்துக் கொள்ளைக்காரர்கள் அல்ல என்றும், கடும் நிதிச்சுமையிலும் கடலில் பேனா கட்ட மக்கள் பணத்தைக் கரைக்க முயன்ற அறிவாலயம் குரூப் தங்களை விமர்சிப்பதா என்றும் த.வெ.க-வினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கையிருப்பு என்று பொய் சொல்லிவிட்டு டிஃபெண்டர் காரில் உலா வரும் முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ-வின் வேலைகளைத் தங்கள் மீது கட்ட வேண்டாம் என்றும் சாடியுள்ளனர். இந்தக் கட்டணத்தை வனத்துறை அமைச்சர் தனது சொந்த அறக்கட்டளை மூலம் அரசாங்கத்திற்கு வழங்கப் போகிறார் என்ற உண்மையை இப்போதாவது உள்வாங்கிக் கொள்ளுமாறு கூறியுள்ள த.வெ.க-வினர், தி.மு.க ஐடி விங் என்பதை ‘ஆர்வக்கோளாறு ஐடி விங்’ என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம் என்றும், தோல்வியிலிருந்து வெளியேற முடியாமல் விஷ மனநிலையில் பொய்ப் பதிவுகளைப் பரப்புவதாகவும் தங்களது கண்டனப் பதிவுகளில் குறிப்பிட்டுள்ளனர்.