கர்நாடக மாநிலம் தாவணகெரே கே.டி.ஜே. நகரைச் சேர்ந்த 26 வயதான பிரபல தேசிய அளவிலான பாடிபில்டர் சுஷில் குமார், மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று நூற்றுக்கணக்கான பதக்கங்களை வென்று தாவணகெரே பகுதிக்குப் பெருமை சேர்த்தவர் சுஷில் குமார். வழக்கம்போல அன்று காலையில் ஜிம்மில் தனது கடுமையான உடற்பயிற்சிகளை முடித்த அவர், மாலையிலும் ஜிம்மிற்குச் செல்லத் தயாராக இருந்துள்ளார்.
இதற்கிடையில், மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரியும் தனது தாயாரை வேலைக்கு அழைத்துச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்படத் தயாரானபோது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு வீட்டின் முன்பே சுருண்டு விழுந்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்த அழுத்தம் மிகவும் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தனர். எனினும், சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே சுஷில் குமார் பரிசோதனை நிலையிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தனது தாயின் மீது மிகுந்த பாசம் கொண்ட சுஷில் குமார், அவருடன் இணைந்து எடுத்த நூற்றுக்கணக்கான வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மருத்துவமனையில் மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றும் பணியில் இருக்கும் ஒரு தாயின் கண் முன்னாலேயே, அவரது வாலிப மகனின் மூச்சு நின்ற சம்பவம் அந்த குடும்பத்தாரைப் பெருத்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எவ்வித தீய பழக்கவழக்கங்களும் இல்லாத, ஒழுக்கமான மற்றும் எளிமையான வாழ்க்கை முறையைக் கொண்ட சுஷில் குமாரின் இந்த திடீர் மரணம் விளையாட்டு உலகினரையும் மருத்துவர்களையும் சிந்திக்க வைத்துள்ளது.
சமீபகாலமாக உடற்தகுதியுடன் இருக்கும் இளைஞர்கள் மத்தியில் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முன்பாக ஜகலூர் பகுதியில் 9 வயது பள்ளி மாணவர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, தற்போது சுஷில் குமார் போன்ற ஆரோக்கியமான தடகள வீரரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
