தெலங்கானா மாநிலம் ஜகித்யாலில் உள்ள நீட் தேர்வு மையம் ஒன்றில், தேர்வு தொடங்குவதற்கான நுழைவு நேரத்தை சில நிமிடங்கள் தவறவிட்ட மாணவியை உள்ளே அனுமதிக்கக் கோரி, அவரது தாய் பாதுகாப்புப் பணியாளர்களின் காலில் விழுந்து கண்ணீர் மல்க கெஞ்சிய காட்சி ஒட்டுமொத்த சமூக வலைதளங்களையும் உலுக்கியுள்ளது. அந்த மாணவியின் உயர்கல்வி கனவு, ஒரு ஆண்டு கால கடுமையான உழைப்பு மற்றும் எதிர்கால நம்பிக்கை என அனைத்தும் வெறும் சில நிமிட தாமதத்தால் பறிபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

​தேர்வு மையத்தின் கடுமையான விதிகளால் தங்களது ஒரு வருட உழைப்பு வீணாகிவிடுமே என்ற வேதனையில், பெற்றோரும் மாணவியும் வாசலிலேயே நின்று கதறி அழுதது அங்கிருந்தவர்களைக் கண் கலங்கச் செய்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு நாளில் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் எதிர்கொள்ளும் கடுமையான மனஅழுத்தம் மற்றும் தேர்வு மையங்களின் இரக்கமற்ற கெடுபிடிகள் குறித்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கண்டனங்களையும், கவலைகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.