பெங்களூரைச் சேர்ந்த தொழில்முனைவோரான டெபாஜோதி ஜேனா, பிரபல ஆண்கள் பராமரிப்பு பிராண்டான ‘பாம்பே ஷேவிங் கம்பெனி’ தனக்கு வாட்ஸ்அப்பில் அளவுக்கு அதிகமாக விளம்பரச் செய்திகளை அனுப்பி தொல்லை செய்வதாக லிங்க்டுஇன் தளத்தில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் நிறுவனத்தின் மூன்று அதிகாரப்பூர்வ பிசினஸ் கணக்குகளில் இருந்து, ஒரு நாளைக்கு தலா மூன்று முறை என மொத்தம் 9 செய்திகள் வரை தனது தனிப்பட்ட வாட்ஸ்அப் எண்ணிற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் எரிச்சலடைந்து அந்த எண்களை பிளாக் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகக் கூறிய அவர், “மக்களின் வாழ்க்கையை நரகமாக்கும் இந்த விளம்பரப் பொழிவை உடனடியாக நிறுத்துங்கள்” என ஆதங்கத்துடன் பதிவிட்டு, அதற்கான ஸ்கிரீன்ஷாட்களையும் ஆதாரமாக இணைத்துள்ளார்.
அதோடு இல்லாமல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு தேஷ்பாண்டேவை டேக் செய்து, “வாடிக்கையாளர்களை இப்படி ஸ்பேம் செய்யுமாறு நீங்கள்தான் உங்கள் மார்க்கெட்டிங் குழுவிற்கு உத்தரவிட்டீர்களா? இதன் மூலம் வருவாய் பெருகும் என்று நினைக்கிறீர்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த வைரல் பதிவிற்கு பதிலளித்த நிறுவனத்தின் சிஇஓ சாந்தனு தேஷ்பாண்டே, “உண்மையிலேயே இப்படி நடந்திருக்கக் கூடாது, இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வாடிக்கையாளர்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தாமல் பயனுள்ள தகவல்களை மட்டும் கொண்டு சேர்க்க நாங்கள் முயன்று வருகிறோம். இனிமேல் இது போன்ற அனுபவம் ஏற்படாதவாறு சிறப்பாகச் செயல்படுவோம்” என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல நெட்டிசன்கள், வாட்ஸ்அப் போன்ற தனிப்பட்ட உரையாடல் தளங்களை நிறுவனங்கள் தங்களின் விளம்பரப் பீரங்கிகளாக மாற்றி வருவதாகக் கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில், சில பயனர்கள் இது தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவோ அல்லது தவறான ஆட்டோமேஷன் அமைப்புகளினாலோ நடந்திருக்கலாம் என்றும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.