வீடுகளில் வேலை செய்யும் ரேஷ்மா என்ற பெண், அனிஷ் பகத் என்ற கன்டென்ட் கிரியேட்டரின் (Content Creator) ஆதரவோடு முதன்முறையாகத் தனது வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார். ஒருபுறம் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தின் உற்சாகம் இருந்தாலும், மறுபுறம் அறிமுகமில்லாத ஒரு நாட்டிற்குத் தனியாகச் செல்வது குறித்த பயமும், எண்ணற்ற கேள்விகளும் அவரிடம் இருந்தன. இதற்கு முன்பு ஒருபோதும் ஆண்கள் எவருடைய துணையும் இன்றி அவர் தனியாக வெளியே சென்றதில்லை என்பதால், இந்த வெளிநாட்டுப் பயணம் அவருக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது.

அப்போது, மொழி புரியாவிட்டாலும் ‘உணவு’ மனிதர்களை இணைக்கும் என்ற நம்பிக்கையில், ரேஷ்மா பாரம்பரிய உணவான ‘புரண் போலி’யைச் (Puran Poli) சமைத்து எடுத்துச் சென்றுள்ளார். பாங்காக் நகரின் வீதிகளில் உலா வந்த அவர், அங்குள்ள ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு இந்தப் புரண் போலியைக் கொடுத்து உண்ணச் செய்துள்ளார். உணவின் மூலம் தொடங்கிய இந்தச் சந்திப்பு, அந்தப் புதிய நாட்டில் அவரது முதல் நட்பாக மாறியது.

https://www.instagram.com/reel/DZiDSv-NMH-/?utm_source=ig_embed&ig_rid=APJdThnLCH14jqRns19V-hl

புடவை அணிந்துகொண்டு பாங்காக் வீதிகளில் ரேஷ்மா தனது முதல் பயண வீடியோவை (Vlog) பதிவு செய்தபோது, அங்குள்ள ஒரு சமூக வலைதள இன்ஃப்ளூயன்சரையும் (Influencer) சந்தித்துப் பேசி, அவருடன் இணைந்து மதிய உணவு சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார். குடும்பப் பொறுப்புகளுக்கு மத்தியில் பெண்கள் பெரும்பாலும் தங்களுக்காக நேரம் ஒதுக்க மறந்துவிடுகிறார்கள் என்று குறிப்பிட்ட ரேஷ்மா, இந்தப் பயணம் தன்னைத் தானே இன்னும் நெருக்கமாகப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றார்.

நாள் முழுவதும் சுற்றித் திரிந்து புதிய அனுபவங்களைப் பெற்ற பிறகு, “ரேஷ்மா, உன்னைக் குறித்து எனக்குப் பெருமையாக இருக்கிறது” என்று அவரே தனக்குக் கூறிக்கொண்ட வார்த்தைகள் லட்சக்கணக்கான இணையவாசிகளின் இதயங்களைத் தொட்டுள்ளன. ரேஷ்மாவின் பயம், அதனை அவர் எதிர்கொண்ட விதம் மற்றும் அவரது முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி ஆகியவை தங்களுக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் பாராட்டி, இந்த வீடியோவைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.