தேர்தல் முடிவுகளுக்குப் பின் தமிழகத்தில் தவெக அரசு அமைவதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏன் ஆதரவு கொடுத்தது என்பதற்கான அரசியல் நுட்பத்தையும், பின்னணியையும் தொல். திருமாவளவன் மேடையில் பகிரங்கமாக உடைத்துப் பேசியுள்ளார். தேர்தலுக்கு முன்பு தாங்கள் விஜய்யை விமர்சித்திருந்தாலும், தற்போது தமிழகத்தில் மதசார்பின்மையைக் காக்க தவெக அரசுக்கு ஆதரவு தருவது அரசியல் கட்டாயமாக மாறியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முடிந்து தவெக ஆட்சி அமைக்க 2 இடங்கள் தேவைப்பட்ட இக்கட்டான சூழலில், அமித்ஷா அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முயற்சித்தார் என்றும், அதற்கு அண்ணன் எடப்பாடியும் தயாராக இருந்தார் என்றும் அவர் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தவெக மட்டும் கொஞ்சம் சாய்ந்திருந்தால் ஒரே நாளில் தேசிய ஜனநாயக கூட்டணியோடு (NDA) ஆட்சி அமைந்திருக்கும் என்று குறிப்பிட்ட திருமாவளவன், ஆனால் ‘பாஜக, பாமக ஆதரவு எனக்குத் தேவையில்லை, மதசார்பற்ற சக்திகளின் ஆதரவுதான் வேண்டும்’ என்று விஜய் துணிச்சலான முடிவு எடுத்ததாகப் பாராட்டினார்.
அதனால்தான் விசிக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் தவெக அரசுக்கு ஆதரவு தந்தோம் என்று குறிப்பிட்ட அவர், 100 மூட்டை ஏற்றிய வண்டியில் இருபுறமும் இருக்கும் ‘கடையாணி’ போன்றவர்கள் தான் விசிகவின் 2 எம்எல்ஏக்கள் என்றும், அந்த கடையாணி இல்லை என்றால் வண்டி ஓடாது என்றும் கூறினார். தவெக கூட்டணியின் வெற்றியை அடக்கமாகப் பாதுகாத்து வைக்கும் ‘இரட்டைப் பானைகள்’ தான் விசிகவின் இரண்டு உறுப்பினர்கள் எனத் திருமாவளவன் தனது உரையில் மாஸ் கமெண்ட் கொடுத்துள்ளார்.
