டெல்லி துவாரகா பகுதியில் கடந்த பிப்ரவரி 3-ஆம் தேதி அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார் மோதி, 23 வயதான சாஹில் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்பதும், விபத்தின் போது அவன் தனது சகோதரியுடன் சேர்ந்து ‘ரீல்ஸ்’ எடுத்துக் கொண்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

தற்போது அந்தச் சிறுவனின் தந்தை நரேந்திர சிங், “என் மகன் செய்த தவறுக்காக நான் வெட்கப்படுகிறேன், பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் மன்னிப்பு கேட்கிறேன்” என உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், இதைக்கேட்டு கொதித்துப் போன உயிரிழந்த சாஹிலின் தாய், “மன்னிக்கச் சொல்லி கேட்கிறீர்கள், ஆனால் உங்கள் மன்னிப்பை ஏற்காததற்கு என்னை மன்னித்துவிடுங்கள்” என கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.

“என் மகன் லண்டனில் எம்பிஏ (MBA) படிக்கத் தேர்வாகி, அவன் போன 10 நாளில் அட்மிஷன் லெட்டர் வந்துள்ளது; ஆனால் அதைப் பார்க்க இன்று அவன் இல்லையே” என அவர் கதறியது காண்போரை நெகிழ வைத்தது.

விபத்து நடந்த போது அந்தச் சிறுவனும் அவனது சகோதரியும் பொதுமக்களிடம் காட்டிய திமிர் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில், இந்த மன்னிப்பு நாடகம் எடுபடவில்லை எனப் பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.