ஹரியானா மாநிலம் குருகிராமில், கர்ப்பிணி மனைவியைக் கொலை செய்துவிட்டு, வழிப்பறிக் கொள்ளையர்கள் தாக்கியதாக நாடகமாடிய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் (CA) கணவரைப் போலீஸார் கைது செய்தனர்.
குருகிராமில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் மஹக் (27). இவரது கணவர் அன்ஷுல் தவான், ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். இவர்களுக்கு கடந்த 2025-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தற்போது கர்ப்பமாக இருந்த மஹக், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாடுவதற்காக கணவருடன் அவரது சொந்த ஊரான ஹிசாரிற்குச் சென்றுள்ளார். மறுநாள், ஹன்சியில் உள்ள மஹக்கின் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டு, அன்று மாலை 7 மணியளவில் மீண்டும் காரில் குருகிராம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறமான பாதையில் மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டதாகவும், அவர்கள் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாகவும் அன்ஷுல் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அன்ஷுலிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, போலீஸார் தங்களது பாணியில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், அன்ஷுல் உண்மையை ஒப்புக்கொண்டார்.
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று காரில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், ஆத்திரமடைந்த அன்ஷுல் முதலில் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர், தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மஹக்கின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.
கொலையைச் செய்தபோது தனது கைரேகைகள் எங்கும் பதிவாகாமல் இருக்க, முன்கூட்டியே கையுறைகளை அணிந்து இக்கொலையைச் செய்ததாக அன்ஷுல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து, போலீஸார் அன்ஷுலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
