இமாச்சல பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில், வேலையில்லா திண்டாட்டத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறு இரண்டு உயிர்களைப் பலிவாங்கியிருப்பது அந்தப் பகுதியையே உலுக்கியுள்ளது. லோத்தல் கிராமத்தைச் சேர்ந்த சர்வன் குமார் என்ற நபர், வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்துள்ளார்.

ஆனால், அவரது மனைவி கூலி வேலை செய்தும், குதிரைகளை ஓட்டியும் கஷ்டப்பட்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்துள்ளார். சம்பாத்தியம் இல்லாத ஏக்கத்தில் இருந்த சர்வன் குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற சர்வன் குமார், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியின் கழுத்தை மிகக் கொடூரமாக அறுத்துக் கொலை செய்தார். பின்னர், செய்த தவறை எண்ணிப் பயந்தாரோ என்னவோ, தானும் அதே வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், இரண்டு மகள்களுக்குத் திருமணமாகிவிட்டது. சம்பவத்தின் போது 17 வயது மகன் வீட்டில் இல்லாததால் உயிர் தப்பினார்.

ஏற்கனவே மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்ற சர்வன் குமார், இறுதியில் தனது மனைவியையும் கொன்று தானும் மடிந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.