நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய், நாகை புத்தூர் அண்ணா சிலை சந்திப்பில் நடந்த பிரசாரத்தில் மக்களின் இதயத்தை தொட்டு பேசினார். “நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், வேளாங்கண்ணி மாதாவின் அருளோடு, உழைப்பாளிகளின் ஊரான நாகை மண்ணில் நிற்கிறேன்.

மதவேறுபாடு இல்லாமல் ஒற்றுமையாக வாழும் நாகை மக்களுக்கு ஸ்பெஷல் வணக்கம். மீன் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நாகை துறைமுகத்துக்கு எந்த வசதியும் செய்யப்படவில்லை. என்றும் மீனவர்களின் நண்பனாக நான் இருப்பேன்,” என்று உருக்கமாக கூறி, தொண்டர்களின் உற்சாகத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றார்.

“இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து பேசுவது குற்றமா? மீனவர்களுக்காக குரல் கொடுப்பது மட்டுமல்ல, நம் தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்களுக்காகவும் நிற்பது நமது கடமை.

அரசு முன்னேற்றம் என அடுக்குமொழியில் பேசுகின்றனர், ஆனால் மீனவர்களின் வாழ்க்கைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்,” என்று விஜய் காட்டமாக பேசினார். திருச்சியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் பயணம் தாமதமானாலும், நாகையில் திட்டமிட்டபடி பிரசாரம் நடத்திய அவர், தொண்டர்களிடம் வாளை பரிசாக பெற்று, மக்கள் மனதில் இடம்பிடித்தார்.