வியட்நாம் தலைநகர் ஹனோயிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில், மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. டாங் சி தான்ஹ் (Dang Chi Thanh) என்ற நபர், தனது மகனுடன் விளையாட அந்தப் பெண்ணின் குழந்தை மறுத்ததால் ஆத்திரமடைந்துள்ளார்.

தனது குழந்தையை அந்தப் பெண் காயப்படுத்தியதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த நபர், ஆத்திரம் தலைக்கேறிய நிலையில் அந்தப் பெண்ணை சரமாரியாகக் கையால் அடித்தும், காலால் எட்டி உதைத்தும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.

அங்கிருந்தவர்கள் தடுக்க முயன்றும், அந்த நபர் ஆவேசத்தைக் குறைக்காமல் தொடர்ந்து அநாகரீகமாக நடந்துகொண்டது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த அந்தப் பெண், பாக் மாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனது தவறை ஒப்புக்கொண்ட அந்த நபர், பெண்ணின் மருத்துவமனை செலவுகள் அனைத்தையும் ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக அவருக்கு 50 மில்லியன் VND வரை அபராதமும், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

“சிறு குழந்தைகள் மற்றும் தனது மனைவி முன்னிலையிலேயே ஒரு பெண்ணை இப்படித் தாக்கும் நபரைச் சிறையில் அடைக்க வேண்டும்” என சமூக வலைதளங்களில் பலரும் தங்கள் குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.