பாகிஸ்தானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல் காரணமாக, அந்த நாட்டு இளைஞர்கள் மற்றும் மருத்துவர்கள், பொறியாளர்கள் உள்ளிட்ட உயர்மட்டப் பணியாளர்கள் பெருமளவில் வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.
கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் சுமார் ஐந்தாயிரம் மருத்துவர்கள், பதினொன்றாயிரம் பொறியாளர்கள் மற்றும் பதிமூன்றாயிரம் கணக்காளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அந்த நாட்டு அரசின் சமீபத்திய அறிக்கை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. முன்னதாக, இத்தகைய இடப்பெயர்வை அறிவுசார் இழப்பு என்று கருதாமல், அது ஒரு அறிவுசார் ஆதாயம் என்று பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள இந்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் அவரது கருத்தைத் தவறென நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளதால், சமூக வலைதளங்களில் அவர் கடுமையான கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகி வருகிறார்.
மேலும், பாகிஸ்தானில் அடிக்கடி அமல்படுத்தப்படும் இணையதள முடக்கம் காரணமாக அந்நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளதாக முன்னாள் செனட்டர் முஸ்தபா நவாஸ் கோக்கர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சுமார் பதினாறு ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, இருபத்து மூன்று லட்சத்திற்கும் அதிகமான பகுதிநேரப் பணியாளர்களின் வேலைவாய்ப்புகள் கேள்விக்குறியாகியுள்ளன.
இந்தத் திறமையாளர்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு விமான நிலையங்களில் சோதனைகளைக் கடுமையாக்கியுள்ள போதிலும், கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ஏழு லட்சம் பேர் வெளிநாடுகளில் வேலை தேடிப் பதிவு செய்துள்ளனர். இது பாகிஸ்தானின் எதிர்கால வளர்ச்சி மற்றும் பொதுச் சுகாதாரத் துறையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.
