நைஜீரிய நாட்டின் நைஜர் டெல்டா மேம்பாட்டு ஆணையத்தின் இடைக்கால மேலாண்மை இயக்குநராக இருந்த டேனியல் பொண்டேய் கடந்த 2020 ஆண்டில் பொது விசாரணை ஒன்றில் கலந்துகொண்ட போது திடீரென மயங்கி விழுந்த பழைய காணொளி தற்போது மீண்டும் இணையதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

எண்ணெய் வளம் மிக்க அந்தப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் நலத்திட்டங்களுக்கான பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து நாடாளுமன்றக் குழுவினர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவர் தனது இருக்கையிலேயே நிலைகுலைந்து சரிந்தார்.

 

உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் அவருக்குத் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்ததைத் தொடர்ந்து அவர் சுயநினைவு திரும்பினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து விசாரணை பாதியிலேயே நிறுத்தப்பட்டு அவர் பாதுகாப்புடன் வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். தற்போது இந்தக் காணொளியைக் காணும் சமூக வலைதளப் பயனாளர்கள் ஊழல் புகாரிலிருந்து தப்பிக்க அவர் நாடகமாடுவதாகக் கிண்டல் செய்தும் அந்நாட்டு மக்களின் நிலை குறித்து வேதனை தெரிவித்தும் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.