உலகில் அதிகம் அறியப்படாத நாடுகளில் ஒன்றான தெற்கு சூடானில், முண்டாரி (Mundari) என்ற பழங்குடியின மக்கள் பசுக்களுடன் மிகவும் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளனர்.
பசுவின் சிறுநீரை வெறும் கழிவாகப் பார்க்காமல், அதை ஒரு இயற்கை கிருமிநாசினியாகவும் (Antiseptic), பூச்சிகளை விரட்டும் மருந்தாகவும் அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் கிசா (Giza) என்ற சுற்றுலாப் பயணி, இந்தப் பழங்குடியின மக்களின் வழக்கப்படி தனது கைகளையும் முகத்தையும் பசுவின் சிறுநீரால் கழுவும் வீடியோவை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்தப் பகுதியில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் கொசுக்களால் பரவும் மலேரியா போன்ற நோய்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள இது ஒரு சிறந்த வழி என அந்தப் பழங்குடியினர் நம்புகின்றனர்.
இந்த பழங்குடியின மக்கள் பசுவின் சிறுநீரைக் கிருமிநாசினியாக மட்டுமல்லாமல், தங்களின் தலைமுடிக்குத் தேய்க்கும் ‘டை’ (Hair Dye) போலவும் பயன்படுத்துகின்றனர்.
அதில் உள்ள அம்மோனியா சத்து, அவர்களின் தலைமுடியை ஒருவித ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுகிறது. அதுமட்டுமின்றி, காய்ந்த சாணத்தை எரித்து அதன் சாம்பலைத் தங்களது உடல் முழுவதும் பூசிக்கொள்வதன் மூலம் சூரிய வெப்பத்திலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்கின்றனர்.
நாகரிக உலகில் இது அருவருப்பான செயலாகத் தோன்றினாலும், அந்தச் சூழலில் உயிர் பிழைக்க இதுவே தங்களின் ‘ஜீனியஸ்’ தொழில்நுட்பம் என அவர்கள் பெருமையுடன் கூறுகின்றனர். இந்த விசித்திரக் கலாச்சாரம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
