மும்பையிலிருந்து ஸ்ரீநகர் சென்ற இண்டிகோ விமானம், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக பிரேக் பழுது ஏற்பட்டு பெரிய விபத்தில் சிக்கவிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணித்த நிலையில், தரைதொட்ட அடுத்த நொடிகளில் பிரேக் இயங்காமல் போனதால் விமானம் கட்டுப்பாட்டை இழக்கும் ஆபத்தான சூழல் உருவானது.

மேலும் பயணிகள் என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் உறைந்துபோக, விமானத்தின் சக்கரங்கள் மற்றும் பிரேக் அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால் பெரும் அசம்பாவிதம் நடக்குமோ என்ற பீதி விமானத்திற்குள் தொற்றிக்கொண்டது.

இருப்பினும், விமானியின் சுதாகரிப்பான நடவடிக்கை மற்றும் திறமையான கட்டுப்பாட்டின் காரணமாக விமானம் ஓடுதளத்தை விட்டு விலகிப் பேராபத்தில் சிக்காமல் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. நல்வாய்ப்பாக பயணிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் எவ்வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மும்பையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பயணிகளின் நல்ல நேரமும், அனுபவமிக்க விமானியின் சமயோசித புத்தியும்தான் இந்த மிகப்பெரிய விபத்தைத் தடுத்து, பல நூறு உயிர்களைக் காப்பாற்றியுள்ளது என்று அங்கிருந்த அதிகாரிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

விமானச் சேவைகளில் தொடர்ச்சியாக வெளிப்படும் இதுபோன்ற தொழில்நுட்பக் கோளாறுகள், பயணிகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை மீண்டும் பல மடங்கு அதிகரித்துள்ளன. இண்டிகோ விமானத்தில் ஏற்பட்ட இந்த பிரேக் கோளாறுக்கான காரணம் என்ன என்பது குறித்துப் சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககம் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஆயிரக்கணக்கில் கட்டணம் செலுத்திப் பயணிக்கும் பொதுமக்களின் உயிரோடு விளையாடும் வகையில் விமானப் பராமரிப்பில் அலட்சியம் காட்டப்படுகிறதா என்ற கேள்விகளும், கடுமையான பாதுகாப்புத் தணிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகின்றன.