எகிப்தின் புகழ்பெற்ற ‘சிவா ஒயாசிஸ்’ (Siwa Oasis) பகுதியில் உள்ள உப்பு ஏரிகள், பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும், தண்ணீரில் மூழ்காமல் மிதக்கும் வசதி கொண்டதாகவும் இருப்பதால் உலகம் முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. ஆனால், ‘கார்மென்’ என்ற பெண் டிராவல் இன்ஃப்ளூயன்சர் அங்கு குளித்தபோது ஒரு பயங்கரமான அனுபவத்தை எதிர்கொண்டுள்ளார்.
ஏரியில் குதிக்கும்போது எதிர்பாராதவிதமாக உப்பு நீர் அவரது கண்களுக்குள் சென்றதால், கண்ணிமைக்கும் நேரத்தில் கடும் எரிச்சல் ஏற்பட்டு அவரது கண்பார்வை மங்கியுள்ளது.
அந்த ஏரியில் உப்பின் அளவு 90 முதல் 95% வரை இருப்பதால், அந்த நீர் கண்களில் பட்டதும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தி கண்பார்வையே போய்விட்டது போன்ற உணர்வைத் தந்துள்ளது.
கண்களில் நீர் புகுந்ததும் கடும் வலியால் துடித்த கார்மென், உடனடியாகத் தனது கண்களைச் சுத்தமான நன்னீரால் கழுவிய பின்னரே மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளார்.
“இந்த ஏரிகள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், தகுந்த முன்னெச்சரிக்கை இல்லாமல் இறங்கினால் ஆபத்து நிச்சயம்” என அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.
உடலில் காயங்கள் அல்லது சமீபத்தில் ஷேவிங் செய்த இடங்கள் இருந்தால், இந்த உப்பு நீர் பட்டவுடன் தேள் கொட்டுவது போன்ற கடுமையான வலியை ஏற்படுத்தும் என அவர் தனது வீடியோவில் விளக்கியுள்ளார்.
எகிப்தின் இந்த ‘மாய ஏரிக்கு’ச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், ஆர்வத்தில் கண்களைத் திறந்து கொண்டு குதிக்க வேண்டாம் என இந்த வைரல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
