தெலங்கானா மாநிலத் தலைநகரான ஐதராபாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அருகே அமைந்துள்ள முக்கியச் சாலைக்கு, ‘டொனால்ட் டிரம்ப் அவென்யூ’ எனத் தெலங்கானா அரசு அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்துள்ளது. ஐதராபாத் நகரின் முக்கிய  மாவட்டமான நானக்ராம்குடா பகுதியில் இந்த அவென்யூ அமைந்துள்ளது. அமெரிக்கத் தூதரகம் மட்டுமின்றி, உலகப் புகழ்பெற்ற பல சர்வதேசத் தொழில்நுட்ப நிறுவனங்களும் இயங்கி வரும் மிக முக்கியப் பகுதியாக இது கருதப்படுகிறது.

ஐதராபாத் நகரத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையிலும், சர்வதேச அளவில் இந்த நகரின் மதிப்பை மேலும் வலுப்படுத்தவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெலங்கானா மாநில உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

தன்னைக் கௌரவிக்கும் வகையில் ஐதராபாத்தில் சாலைக்குப் பெயர் சூட்டப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இதுதொடர்பான சிறப்பு விழாவின் புகைப்படத்தைத் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர், இந்தியாவில் இத்தகைய உயரிய முறையில் கௌரவிக்கப்படும் முதல் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப் ஆகிய நான்தான் என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஐதராபாத்தின் இந்த உலகளாவிய முயற்சிக்கு உலகத் தலைவர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், இந்தச் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறித் தீயாய் பரவி வருகிறது.