மத்திய பிரதேச மாநிலத்தின் சூர்னா வனச்சரகப் பகுதியில் படமாக்கப்பட்ட 22 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி, வனத்துறையினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், போரி வனச்சரகப் பொறுப்பு அதிகாரியாக இருக்கும் நபர் ஒருவர், மரத்தடியில் அமர்ந்துகொண்டு தட்டில் இருக்கும் அவலை காட்டுச் சாம்பார் மான் ஒன்றிற்குக் கைகளாலேயே ஊட்டி, அதன் உடலைத் தடவிக் கொடுக்கிறார்.

பின்னணியில் பாலிவுட் பாடல் ஒன்று ஒலிக்கும் வகையில் இந்த வீடியோ அமைந்துள்ளது. சமீபத்தில் இந்த மானை அவர் மீட்டுப் பராமரித்ததாகக் கூறப்படும் நிலையில், இந்த வீடியோவை ஆய்வு செய்த சாத்புரா புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராகேஷ் நந்தா, அந்த அதிகாரி தனது கடமையில் இருந்து தவறி, வனவிலங்கு பாதுகாப்பு விதிகளைத் துச்சமாக மதித்து அலட்சியமாகச் செயல்பட்டுள்ளார் எனக் கூறி அவரை உடனடியாகச் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இந்த வீடியோ காட்சிகள் வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான கண்டனங்களை எழுப்பியுள்ளது. காட்டு விலங்குகளைச் செல்லப்பிராணிகளைப் போல நடத்துவது அவற்றின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மனிதர்கள் கொடுக்கும் உணவிற்கு விலங்குகள் பழகிவிட்டால், அவை மனிதர்களைக் கண்டு அஞ்சும் தங்களது இயற்கை குணத்தை இழந்துவிடும்.

இதனால் காடுகளை விட்டு வெளியேறி மனித குடியிருப்புகளுக்குள் நுழையும் அபாயம் ஏற்படுவதுடன், மனித-விலங்கு மோதல்கள், சாலை விபத்துகள் மற்றும் சட்டவிரோத வேட்டைக்காரர்களிடம் அவை எளிதில் சிக்கும் ஆபத்துகள் பல மடங்கு அதிகரிக்கும் என்று வனவிலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த விதிமீறல் தொடர்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர் அஜய் துபே அளித்த புகாரின் பேரிலும் தற்போது வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.