உத்தரபிரதேச மாநிலம் ஜான்ஸியில் உள்ள மஹாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரியின் ஆபரேஷன் தீயேட்டரில் புதன்கிழமையன்று பாம்பு ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேஷன் தியேட்டரின் பொறுப்பாளராக பணியாற்றும் கனக் ஸ்ரீவாஸ்தவா என்பவர் அந்த பாம்பை முதலில் பார்த்து, உடனே வனத்துறையை தொடர்பு கொண்டார்.
தகவலின் பேரில் வந்த வனத்துறை அதிகாரிகள் அந்த பாம்பை பாதுகாப்பாக பிடித்து காட்டு பகுதியில் விட்டனர். இந்தச் சம்பவம், மருத்துவமனை நிர்வாகத்தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக, கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி இம்மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் இப்போதும் மக்கள் நினைவில் உள்ள நிலையில், மீண்டும் இவ்வாறான அவசர நிலை ஏற்பட்டது பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.
மருத்துவமனை தலைமை மருத்துவ மேற்பார்வையாளர் டாக்டர் சச்சின் மஹோர் கூறுகையில், “மழைக் காலங்களில் மருத்துவமனைக்கு அருகிலும் உள்ளடக்கத்திலும் பாம்பு மற்றும் பிற பூச்சிகள் புகுந்து வரும் அபாயம் அதிகரிக்கிறது. இதனை தடுக்கும் விதமாக, அனைத்து பணியாளர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளனர்,” என்றார். தற்போது மருத்துவமனை முழுவதும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
