தெலுங்கானா மாநிலம் இப்ராஹீம்பட்டினத்தில் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு நடந்ததுள்ளது. பழச்சாறு கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த 30 வயதான இளைஞர் திடீரென இதயம் செயலிழந்து மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஈகலவ்யா என அழைக்கப்படும் அந்த இளைஞர், கம்மம் மாவட்டம் பல்லேபாடையை சேர்ந்தவர்.

 

இவர் நண்பருடன் இப்ராஹீம்பட்டினம் மப்பாசல் மையத்தில் தங்கியிருந்தார். இரவு 8 மணியளவில் ஜூஸ் குடிக்க சென்றபோது அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு, அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து அருகிலிருந்தவர்கள் உடனே சி.பி.ஆர் செய்து, போலீசாருக்கு தகவல் அளித்தனர். ஆனால் அந்த நேரத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், போலீஸ் வாகனத்தில் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவர்கள் அவரை இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்த  சம்பவ அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. இளைஞரின் உடல் தற்போது இப்ராஹீம்பட்டினம் மரண பரிசோதனை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம், இளைஞர்களுக்கு கூட திடீர் மாரடைப்புகள் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருவதை உறுதி செய்கிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே 20-40 வயதுக்குட்பட்டவர்கள் திடீர் மாரடைப்பால் உயிரிழக்கும் பரிதாபங்கள் அதிகரித்து வருகின்றன. மருத்துவ நிபுணர்கள், தற்போதைய உணவுமுறை, உடற்பயிற்சி குறைவு மற்றும் மன அழுத்தம் போன்ற காரணம் தான் இதற்கு முக்கியக் காரணமாக இருப்பதாக எச்சரிக்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொருவரும் தங்களது ஆரோக்கியத்தை கவனித்து வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் மிகுந்துள்ளது.