தற்போது பெய்து வரும் பருவமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இமாச்சல பிரதேசமும் ஒன்று. தொடர்ச்சியான கனமழையுடன் பலமுறை மேகவெடிப்பு ஏற்பட்டு பேய் மழை கொட்டியதால், குறிப்பாக மண்டி பகுதி மிகுந்த சேதத்தை சந்தித்துள்ளது. வீடுகள், கடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, எப்படியோ தங்களது வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் தனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டு, “நேற்று என்னுடைய ரெஸ்டாரன்டில் வெறும் 50 ரூபாய்க்கே வியாபாரம் நடந்தது. நான் 15 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்குகிறேன். எனது துயரத்தையும் புரிந்து கொள்ளுங்கள்.
நான் இமாச்சலத்தைச் சேர்ந்தவள். என் வீடும் இங்கேதான் உள்ளது” எனக் கூறியுள்ளார். இந்த ஆண்டு மணாலியில் மவுண்டைன் ஸ்டோரி என்ற உணவகத்தை தொடங்கிய அவர், மாநிலத்தின் பாரம்பரிய உணவுகளை பிரபலப்படுத்தியிருந்தார். ஆனால் கனமழை, நிலச்சரிவால் சுற்றுலா துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கங்கனா ரணாவத் பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. கோவிந்த் சிங் தாகூருடன் சேர்ந்து சோலங்க், பல்சான் கிராமங்களுக்கு சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போது, 15 முதல் 16 வீடுகள் பாதுகாப்பற்றதாக அறிவிக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த ஜூன் 20 முதல் பெய்து வரும் கனமழை மற்றும் நிலச்சரிவால் மாநிலம் முழுவதும் 419-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில் 52 பேர் நிலச்சரிவில் சிக்கி பலியானது அந்த மாநிலத்தில் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
