பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடரில், பெஷாவர் சல்மி மற்றும் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் மோதிய போட்டியில் அரங்கேறிய ஒரு சம்பவம், ரசிகர்களைச் சிரிப்பு மழையில் நனைய வைத்துள்ளது.
ஒருபுறம் பெஷாவர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றாலும், மைதானத்தில் நடந்த அந்த ‘ரன்-அவுட்’ சொதப்பல் தான் இப்போது இணையத்தில் டாப் ட்ரெண்டிங். அப்ரார் அகமது வீசிய பந்து ‘நோ-பால்’ ஆக அறிவிக்கப்பட, அடுத்து வந்த ‘ஃப்ரீ ஹிட்’ வாய்ப்பில் பேட்ஸ்மேன் பந்தை அடித்துவிட்டு ரன் ஓடினார்.
Comedy of errors in #PSL pic.twitter.com/xWnrySjlMK
— Nibraz Ramzan (@nibraz88cricket) April 15, 2026
அப்போது இரண்டு பேட்ஸ்மேன்களும் பிட்ச்சின் நடுவே வந்து நிற்க, பந்து கையில் இருந்த பீல்டரோ யாரை அவுட் செய்வது எனத் தெரியாமல் கையில் பந்தை வைத்துக்கொண்டே ஓடிவந்தார். இரண்டு பேட்ஸ்மேன்களும் கிரீஸிற்கு வெளியே இருந்தும், பந்தை ஸ்டம்பை நோக்கி எறியாமல் பீல்டர் செய்த அந்தத் தாமதம் ‘காமெடி ஆஃப் எரர்ஸ்’ என வர்ணிக்கப்படுகிறது.
கடைசியில் அவர் வீசிய பந்தும் ஸ்டம்பில் படாமல் போக, அவுட் ஆக வேண்டிய பேட்ஸ்மேன்கள் சிங்கிள் ரன் எடுத்துத் தப்பினர். இந்த வீடியோவைச் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வரும் நெட்டிசன்கள், “பாகிஸ்தான் பிளேயர்ஸ்னாலே இப்படித்தான் போல” என்றும், “இது கிரிக்கெட்டா இல்ல ஊர் திருவிழா விளையாட்டா?” என்றும் கிண்டலடித்து வருகின்றனர்.
சர்வதேச அளவிலான ஒரு டி20 லீக்கில் இத்தனை மோசமான பீல்டிங் மற்றும் ரன்-அவுட் சொதப்பல்கள் நடந்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
