இந்தியாவில் உள்ள ஒரு கடையில், சாமர்த்தியமான ஒரு குரங்கு கச்சிதமாகத் திட்டமிட்டுத் திருடும் காட்சி வீடியோவாகப் பதிவாகி, ‘திருட்டு மாஸ்டர்மைண்ட்’ என்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மனிதர்களை விடத் துல்லியமாகத் திருட்டுச் சம்பவத்தை இந்தக் குரங்கு கையாண்ட விதம், சமூக வலைத்தளப் பயனர்களை ஆச்சரியத்திலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது.

அந்த வீடியோவில், ஒரு கடையின் கூரை மேல் அமர்ந்திருக்கும் குரங்கு, சுற்றுப்புறம், ஆட்கள் நடமாட்டம் மற்றும் தப்பிக்கும் பாதை என அனைத்தையும் கூர்மையாகக் கவனிக்கிறது. பொதுவாக, குரங்குகள் கடையின் வாசலில் தொங்கவிடப்பட்டிருக்கும் வாழைத்தார்களை எதிர்பார்த்துச் செல்லும்.

ஆனால், இந்தக் குரங்கு புத்திசாலித்தனமாகப் பழங்களைத் தவிர்த்து விடுகிறது. பின்னர், எஃகு கேட்டைப் பிடித்துப் பாவ்லா காட்டி, மின்னல் வேகத்தில் நான்கு பாக்கெட் நொறுக்குத் தீனிகளை (Snacks) மட்டும் திருடிச் சென்று விடுகிறது.

சத்தம் இல்லை, பதற்றம் இல்லை, குழப்பம் இல்லை! இந்தச் சுத்தமானத் திருட்டு அரங்கேறிய விதம் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. “பழங்களை விட்டுவிட்டுப் பாக்கெட் உணவைத் தேர்ந்தெடுத்த நவீன காலக் குரங்கு” என்று ஒருவர் கமெண்ட் செய்துள்ளார்.