ஒடிசாவின் பெர்ஹாம்பூரைச் சேர்ந்த ப்ரீத்திபன்னா மிஸ்ரா (40), தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த பானு தேஜா (43), பெங்களூரில் பணியாற்றுகிறார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்வில் சந்தித்த இருவருக்கும் நட்பு மலர்ந்து காதலாக மாறியது. இதன் தொடர்ச்சியாக, அவர்கள் திருமணம் நேற்று முன் தினம் பெர்ஹாம்பூரில் நடைபெற்றது.
இந்த திருமணம் பாரம்பரிய சடங்குகள் இன்றி, முற்றிலும் அரசியலமைப்பின் மீது உறுதிமொழி எடுத்து நடைபெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
திருமணத்திற்குப் பிறகு, மண்டபத்தில் ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு, மணமக்கள் இருவரும் ரத்த தானம் செய்தனர். அவர்களைத் தொடர்ந்து திருமணத்தில் கலந்துகொண்ட உறவினர்களும் ரத்தம் தானம் செய்ததால், மொத்தம் 18 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.
ஒடிசாவில், அரசியலமைப்பு உறுதிமொழியுடன் நடைபெற்ற இந்த தனிச்சிறப்பான திருமணமும், ரத்த தானம் செய்யும் மனிதநேய முயற்சியும், சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
