உத்தரப் பிரதேச மாநிலம் முராதாபாத் பகுதியில் ஒரு காதல் ஜோடி வெளியிட்ட வீடியோ, அந்தப் பகுதி முழுவதும் காட்டுத்தீயாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில், இளம்பெண் ஒருவர் தான் தனது விருப்பப்படியே வீட்டை விட்டு வெளியேறுவதாகவும், வாலிபர் தன்னை அழைத்துச் செல்லவில்லை என்றும் தைரியமாகப் பேசினார்.
“நாங்கள் இருவரும் மேஜர், எங்கள் விருப்பப்படி சேர்ந்து வாழப்போகிறோம்” என அவர்கள் உறுதியாகக் கூறிய வீடியோவைப் பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த பெற்றோர், பின்னர் ஒரு அதிரடி முடிவை எடுத்தனர்.
பொதுவாக இது போன்ற வீடியோக்கள் வெளியானால் மோதல்கள் வெடிப்பது வழக்கம், ஆனால் இங்கு நிலைமையே தலைகீழாக மாறியது. இரு குடும்பத்தினரும் அமர்ந்து பேசி, ஊர் பெரியவர்கள் மற்றும் மௌலவிகள் முன்னிலையில் அந்த ஜோடிக்கு முறைப்படி ‘நிக்காஹ்’ செய்து வைத்தனர்.
துணிக்கடையில் வேலை பார்த்த வாலிபருக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மாறிய நிலையில், தற்போது முறைப்படி கணவன்-மனைவியாக அவர்கள் வாழத் தொடங்கியுள்ளனர்.
விபரீதத்தில் முடிய வேண்டிய ஒரு காதல் கதை, பெற்றோரின் பக்குவமான முடிவால் மகிழ்ச்சியில் முடிந்தது அந்தப் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
